மாலைமாற்றுப் பதிகம் (திருமாலைமாற்று) என்பது திருஞானசம்பந்தர் சீர்காழி இறைவர் மீது பாடிய, மாலைமாற்று என்னும் சித்திரக்கவி யாப்பு வடிவிலான சிறப்பான பதிகமாகும்.தமிழில் நான்கு வகைக் கவிகள் உள்ளன. அவை ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி.அவற்றுள் சித்திரக் கவி வகையில் வருவதே மாலை மாற்று எனப்படும்.
ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.
ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் Palindrome என்று சொல்வார்கள். மிகவும் பிரசித்தமான ஆங்கிலத் தொடர் ABLE WAS I ERE I SAW ELBA, இந்த வகைக்கு சிறந்த உதாரணம். இந்த கூற்று பிரான்ஸ் நாட்டு அதிபராகத் திகழ்ந்த நெப்போலியனின் கூற்று.ஒரு மாலையில் மணிகளைக் கோர்த்த பின்னர் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அந்த மாலை ஒரே மாதிரி இருக்குமல்லவா? அதுபோல இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப் புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப் புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும்.
மாலைமாற்று பதிகத்தினை மிறைக் கவி என்று கூறுவார்கள். மிறை என்றால் வருத்தம் என்று பொருள். மூளையை வருத்தி, சொற்களை சரியாக பிரித்து பொருள் காணவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அழைத்தனர்.இந்த வகை கவிதையிலும் தத்துவக் கருத்துக்களையும், இராவணனின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர் பற்றிய குறிப்பு, பதிகத்தின் பலன் ஆகியவை கொடுக்கப் பட்டுள்ள தன்மை, இறைவனின் அருளால் திருஞான சம்பந்தர் பெற்ற புலமைத் திறனை உணர்த்துகின்றது.இந்த பதிகத்தின் பாடல்கள் பெரும்பாலும் நெடில் எழுத்துக்களை கொண்டவை. அதில் ஒரு பாடலை நாம் இங்கு காணலாம்.
பாடல் 1
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா;
விளக்கம்:
யாம் ஆமா நீ யாம் ஆம் மாயாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா
அனைவரிலும் தங்களை உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டு பலரும் அகம்பாவத்துடன் இந்த உலகத்தில் திரிவதை நாம் காண்கின்றோம். அனைவரிலும் உயர்ந்தவனாகிய ஒப்பற்ற இறைவன் ஒருவன் இருக்கையில் எவரேனும் தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு திரிவது தவறு அல்லவா. அந்த செய்தியைத் தான் திருஞானசம்பந்தர் யாமாமா நீ யாம் ஆம் என்ற தொடரின் மூலம் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
யாம்=உயிர்களாகிய நாங்கள் கடவுள் என்றால்; ஆமா=அது பொருந்துமா, பொருந்தாது; நீ=நீயே கடவுள் என்றால் யாம் ஆம்=ஆமாம், அது மிகவும் பொருத்தமானது.
மா=பெரிய; மாயாழீ=பெரிய பேரி எனப்படும் யாழினை வாசிக்கும் இறைவன்; காமா=அனைவரும் விரும்பும் வண்ணம் அழகு உடையவனே.
காண் நாகா=அனைவரும் காணும் வண்ணம் பாம்பினை அணிந்தவன்; காணாகாமா=கை கால் முதலிய உறுப்புகள் உட்பட அவனது உடலினை எவரும் காணாத வண்ணம், உருவம் அற்றவனாக, காமனை மாற்றியவனே, காழீயா=சீர்காழி தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனே, மா=இலக்குமி தேவி; மாயா=மாயன் என்று அழைக்கப்படும் திருமால்; மா=கரியது (மலத்தினை கரிய நிறம் கொண்டதாக கூறுவது மரபு) மாயா=மாயை போன்ற மலங்களிளிருந்து; நீ=நீ எம்மை விடுவிப்பாயாக.
சொல் நயமும் பொருள் நயமும் பொருந்தி, மாலை மாற்று வகையில் மிகவும் அழகாக அமைந்துள்ள இந்த பாடலை படிக்கும் நமக்கு மலைப்பு ஏற்படுகின்றது. இத்தகைய பாடலை கொண்டாடி தமிழின் பெருமையை பறை சாற்றுவோமாக.