Sunday, May 10, 2026

அன்னையர் தினம் 2026


அன்னையர் தினம் 

அள்ளக் குறையாத அன்பு,
அரவணைப்பின் அம்சம்!
கருவறையில் சுமந்தது 
பத்து மாதங்களே,
மனவறையில் சுமப்பது
மண்ணில் உள்ளவரை!
உடலினோர் அங்கம்
ஊர் தாண்டி வாழ்ந்தாலும்,
உள்ளத்தில் ஊன்றி
உயிர் வாழ்பவள்!
விண்ணையும் தாண்டும்
அன்னையின் அன்பை
கண்ணிலும் மேலாக
எண்ணி மகிழ்வோம்!

இனிய அன்னையர் தின வாழ்த்துகள் ❤️🌸

- விஜி பாலாஜி

Friday, April 17, 2026

சிலேடை


"தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்" என பாரதியார் போற்றிய, செம்மொழியான தமிழ் அமிழ்தை விட இனிமையானது. அது "திகட்டத் திகட்ட சுவைக்கக்" கூடியது.

ஒரே பாட்டில் அல்லது தொடரில் இருவேறு பொருள்களைக் கூறுவது சிலேடை ஆகும். இரு வேறு பொருள் பொதிந்த இந்த சிலேடை பாடல்கள் படிக்கப் படிக்க நம்மை பரவசமாக்கக் கூடியது. அப்படி ஒரு பாடலைத்தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். 

கம்பர் ஒருமுறை ஔவையாரிடம் ஒரு விடுகதை சொல்கிறேன், புதிரை விடுவியுங்கள் பார்க்கலாம் என்று கூறி 'ஆரை' என்னும் கீரையைக் குறிப்பதாகப் பொருளை உள்ளடக்கி கீழ்க் கண்டவாறு சொன்னார்:-
பாடல்

'ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி'

இதை பிரித்துப் பொருள் கொண்டால்

ஒரு கால் அடி, நால் இலைப் பந்தல் அடி

ஒரு அடி என்பது 12 அங்குலங்கள்; எனவே கால் அடி என்பது 3 அங்குலங்கள். அதாவது, “மூன்று அங்குல நீளமும், நான்கு இலைகளால் ஆன பந்தல் போன்ற அமைப்பின் கீழேயும் உள்ளது எது?” எனக் கேட்டதாகப் பொருள் கொள்ளலாம். 

இதையே, “ஒரு கால் கொண்டதடி; நான்கு இலைகளைப் பந்தல் போல் கொண்டதடி – அது என்ன?” என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது ஔவையாரை “வாடி, போடி” என்ற ரீதியில் மரியாதைக் குறைவாகப் பேசியதாகவும் கொள்ளலாம்.

இதில் ஒளவையார் எடுத்துக்கொண்டது இரண்டாவது பொருளை! உடனே அவர்,

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே, – முட்டமேற்

கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாயது.

என்று பதில் கூறினார்.

பொருள்

அடேய் ! அவலட்சணம் பிடித்தவனே ! எருமைக் கடாவே ! கழுதையே !; குட்டி சுவரே !; குரங்கே !; நீ சொன்னது ஆரைக் கீரையைத் தானடா !

சொற்பொருள்

எட்டேகால் லட்சணமே: தமிழில் 8 என்பதன் குறியீடு “அ”; கால் என்பதன் குறியீடு “வ”. எனவே இதன் பொருள் “அவ லட்சணமே”

எமனேறும் பரியே: இங்கே பரி என்பது வாகனத்தைக் குறிக்கிறது. அதாவது எமனின் வாகனம் எருமை. எனவே இது “எருமையே” என்றாகிறது.

மட்டில் பெரியம்மை வாகனமே: பெரியம்மை என்பது ஸ்ரீதேவியின் தமக்கையான மூதேவியைக் குறிக்கிறது. அவரது வாகனம் கழுத்தை. எனவே “கழுதையே”

முட்டமேற் கூரையில்லா வீடே: தலை முட்டுமாறு மேலே கூரை இல்லாத வீடு. அதாவது “குட்டிச்சுவரே”

குலராமன் தூதுவனே: இராமபிரானுக்காக இராவணனிடம் தூது சென்றவன் ஹனுமன். அதாவது “குரங்கே”

ஆரையடா சொன்னாயது: நீ சொன்னது “ஆரைக்கீரையை” (தற்போது “அரைக்கீரை” என்று கூறப்படும் கீரை) என்றும் பொருள் கொள்ளலாம்; யாரைப்பார்த்தடா கேட்டாய் என்றும் பொருள் கொள்ளலாம். தன்னை “அடி” என விளித்ததால் “அடா” என அழைத்து பதிலடி கொடுத்திருக்கிறார். 

அதன் மற்றொரு பொருள், 

விரைந்து நடக்கும் காலழகா ! எம் குலத்தவனே ! வளரும் செல்வமே ! தேவலோகம் போன்றவனே ! உயர்குல வேந்தன் இராமபிரானின் கதையை காவியமாக்கிய கவிஞனே ! ஆரைக் கீரையை உட் பொருளாக வைத்து நீ விடுகதையைச் சொன்னாய் ! ஆனால் என்னை நீ வெல்ல முடியாது !

சொற்பொருள்:-

எட்டு + கால் = எட்டுக்கால் - எட்டேகால் ; எட்டு = கால்களை எட்டிப் போட்டு நடக்கும், லட்சணமே = அழகனே ! (விரைவாக நடக்கும் வலிமை பொருந்திய கால்களை உடைய அழகனே !) எமன் = எம்முடைவன் (எம் குலத்தவனே !); ஏறும் பரியே = வளரும் செல்வமே !, முட்ட மேல் கூரை இல்லா வீடே = தலையில் முட்டும் அளவுக்குத் தாழ்வான மேற்கூரை இல்லாத ; வீடே (அதாவது தேவலோகம் போன்றவனே !) குலராமன் = உயர்குலத்தில் பிறந்த வேந்தனான இராமபிரானின்; தூதுவனே = இராமாயணம் என்னும் இராம காதையை இயற்றி, இராமனின் புகழ் பரப்பும் தூதனே ! ஆரை = ஆரைக் கீரையை; அடா = உள்ளடக்கி, சொன்னாய் = என்னிடம் விடுகதையைச் சொன்னாய் ; அடா = அடாது.

இந்த நிகழ்வு உண்மையா பொய்யா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இரண்டுமே அழகான சிலேடை பாடல்கள். கவித்துவத்தை வியந்தேன்! களிப்புடன் பகிர்ந்தேன்😊


மகளிர் தினம்



மார்ச் மாதத்தில் 
மகளிர் தினக் கொண்டாட்டம் 
மரபாகிப் போனது! 

மேடைகள் பலவும் 
ஊடகங்கள் நூறும் 
பெண்களின் சாதனைகள் பேசும், 
கரடு முரடான, கடினமான 
கடந்து வந்த கதைகள் பேசும்! 

அடிப்படை உரிமையான 
கல்வி கூட கிடைக்கப் பெறாத 
காலத்தைத் தாண்டி விட்டோம்.

வேலைக்குப் போகும் உரிமை பெற 
விடாப்பிடியாய் போராடி 
வெற்றியும் பெற்றுவிட்டோம்! 

கல்வி கிட்டியது, 
வேலை வாய்ப்பும் வாய்த்தது.
பாதுகாப்பும், உயர் பதவிகளில் 
பிரதிநிதித்துவமும் 
கிட்டவில்லையே இன்றும்!

வேலைக்குப் போகும் பெண்களின் 
வேலைச் சுமையை 
சமாளிப்பது சவால்தான்! 
அலுவலக வேலையும் 
அனுதின அடுப்படி வேலையும் 
இரட்டைச் சுமை! 

பெண்கள் வீட்டு வேலை செய்தால் 
அதற்கு பெயர் கடமை, 
ஆண்கள் வீட்டு வேலை செய்தால் 
அதற்கு பெயர் உதவி! 
வீட்டு வேலைகள் அனைத்தையும் 
வீட்டுப் பெண்களின் பெயரில் 
விபரமாக சாசனம் செய்தது யாரோ?

திருமணத்திற்கு தடையாக இருந்த 
வரதட்சணை கொடுமையில் இருந்து 
வெளிவந்தோம் சட்ட ரீதியாக.. 
வந்தது புது ப்பிரச்சனை! 
ஆணை விட பெண்கள் 
அதிக சம்பளம் வாங்கினால் 
ஆகாதாம் குடும்பத்திற்கு..
அடிபடுமாம் ஆண் செருக்கு!

பேசாதீர் இன்னும் ஒரு முறை 
பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று!
சுதந்திரம் கொடுக்க அவள் அடிமை இல்லை..
அவளது அடிப்படை உரிமைகளுக்கு 
அடுத்தவர் அனுமதி தேவையில்லை!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்


திருமாலைமாற்று



மாலைமாற்றுப் பதிகம் (திருமாலைமாற்று) என்பது திருஞானசம்பந்தர் சீர்காழி இறைவர் மீது பாடிய, மாலைமாற்று என்னும் சித்திரக்கவி யாப்பு வடிவிலான சிறப்பான பதிகமாகும்.தமிழில் நான்கு வகைக் கவிகள் உள்ளன. அவை ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி.அவற்றுள் சித்திரக் கவி வகையில் வருவதே மாலை மாற்று எனப்படும். 

ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.

ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் Palindrome என்று சொல்வார்கள். மிகவும் பிரசித்தமான ஆங்கிலத் தொடர் ABLE WAS I ERE I SAW ELBA, இந்த வகைக்கு சிறந்த உதாரணம். இந்த கூற்று பிரான்ஸ் நாட்டு அதிபராகத் திகழ்ந்த நெப்போலியனின் கூற்று.ஒரு மாலையில் மணிகளைக் கோர்த்த பின்னர் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அந்த மாலை ஒரே மாதிரி இருக்குமல்லவா? அதுபோல இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப் புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப் புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும்.

மாலைமாற்று பதிகத்தினை மிறைக் கவி என்று கூறுவார்கள். மிறை என்றால் வருத்தம் என்று பொருள். மூளையை வருத்தி, சொற்களை சரியாக பிரித்து பொருள் காணவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அழைத்தனர்.இந்த வகை கவிதையிலும் தத்துவக் கருத்துக்களையும், இராவணனின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர் பற்றிய குறிப்பு, பதிகத்தின் பலன் ஆகியவை கொடுக்கப் பட்டுள்ள தன்மை, இறைவனின் அருளால் திருஞான சம்பந்தர் பெற்ற புலமைத் திறனை உணர்த்துகின்றது.இந்த பதிகத்தின் பாடல்கள் பெரும்பாலும் நெடில் எழுத்துக்களை கொண்டவை. அதில் ஒரு பாடலை நாம் இங்கு காணலாம்.

பாடல் 1

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா;

விளக்கம்:

                  யாம் ஆமா நீ யாம் ஆம் மாயாழீ காமா காண் நாகா

                  காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா

அனைவரிலும் தங்களை உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டு பலரும் அகம்பாவத்துடன் இந்த உலகத்தில் திரிவதை நாம் காண்கின்றோம். அனைவரிலும் உயர்ந்தவனாகிய ஒப்பற்ற இறைவன் ஒருவன் இருக்கையில் எவரேனும் தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு திரிவது தவறு அல்லவா. அந்த செய்தியைத் தான் திருஞானசம்பந்தர் யாமாமா நீ யாம் ஆம் என்ற தொடரின் மூலம் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். 

யாம்=உயிர்களாகிய நாங்கள் கடவுள் என்றால்; ஆமா=அது பொருந்துமா, பொருந்தாது; நீ=நீயே கடவுள் என்றால் யாம் ஆம்=ஆமாம், அது மிகவும் பொருத்தமானது.
மா=பெரிய; மாயாழீ=பெரிய பேரி எனப்படும் யாழினை வாசிக்கும் இறைவன்; காமா=அனைவரும் விரும்பும் வண்ணம் அழகு உடையவனே. 
காண் நாகா=அனைவரும் காணும் வண்ணம் பாம்பினை அணிந்தவன்; காணாகாமா=கை கால் முதலிய உறுப்புகள் உட்பட அவனது உடலினை எவரும் காணாத வண்ணம், உருவம் அற்றவனாக, காமனை மாற்றியவனே, காழீயா=சீர்காழி தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனே, மா=இலக்குமி தேவி; மாயா=மாயன் என்று அழைக்கப்படும் திருமால்; மா=கரியது (மலத்தினை கரிய நிறம் கொண்டதாக கூறுவது மரபு) மாயா=மாயை போன்ற மலங்களிளிருந்து; நீ=நீ எம்மை விடுவிப்பாயாக.

சொல் நயமு­ம் பொருள் நயமும் பொருந்தி, மாலை மாற்று வகையில் மிகவும் அழகாக அமைந்துள்ள இந்த பாடலை படிக்கும் நமக்கு மலைப்பு ஏற்படுகின்றது. இத்தகைய பாடலை கொண்டாடி தமிழின் பெருமையை பறை சாற்றுவோமாக.


Thursday, December 11, 2025

பாரதி!

 

பார் உள்ளவரை 
பேசப்படுவாய்! 

நீர் உள்ளவரை 
நீங்காது இருப்பாய்! 

நிலம் உள்ளவரை
நிலைத்து நிற்பாய்! 

காற்று உள்ளவரை 
போற்றப் படுவாய்! 

நெருப்பு உள்ளவரை 
விரும்பப் படுவாய்! 

ஆகாயம் உள்ளவரை 
ஆராதரிக்கப்படுவாய்! 

அழிவே இல்லாத எழில் நீ! 
தரணியின் தமிழர்கள் தலைவணங்கும் தலைவன் நீ! 

முண்டாசுக் கவியின் பிறந்தநாள் 
முத்தமிழுக்கு முகூர்த்த நாள்!
 
- விஜி பாலாஜி 🙏🏻

Wednesday, April 23, 2025

கடலுக்கு மடல்

கடலின் மடியில் 
கடற்கரை மணலில் 
மங்கும் மாலைப் பொழுதில் - எனது
மனதில் தோன்றிய வரிகள்  
கடலுக்கு நான் எழுதிய மடல்! 

கடலுக்கு மடல்! 

ஓயாது அலைகளை ஒதுக்குகிறாய் 
ஒரு பொழுதும் 
ஓய்வின்றி இயங்குகிறாய்!

அலைகள் உனது ஆரவாரமா 
அல்லது உனது 
மனதின் பாரமா? 

அலைகளைப் பார்த்தால் 
ஆர்ப்பரிக்கும் மனது 
அலைகளின் ஓசையில் அமைதியாகிறது! - உனது

அலைகளின் அணைப்பு 
அழகான அரவணைப்பு! - உனது
அலைகளின் அசைவு 
அன்னையின் தாலாட்டு! 

கடலின் அலைகள்
உடலில் மோதினால் 
மனதின் அலைகள் 
மடிந்து விடும்! 
மதி மயங்கி விடும்
மனம் முக்தி பெறும்!

கடலின் அலைகள்
காணாமல் போவது போல் 
மனதின் அலைகளும் 
மாறித்தான் போகின்றன! 

கடலே! - நீ
அடங்காமல் அலைகளை 
உருவாக்கி உலகுக்கு
உரைத்த பாடம் 
உரைத்தது - உனக்கு
ஓராயிரம் நன்றி🙏🏻

- விஜி பாலாஜி

Sunday, May 14, 2023

அன்னையர் தினம் 2023

ஈன்றெடுத்து ஈருயிராகிய இணையில்லா உறவே! 
மார் பிழிந்து பாலூட்டிய
மனமார்ந்த மகிழ்வே!
தாலாட்டித் தூங்க வைத்த
தன்னிகரற்ற தருவே!
ஏதுமறியா அகவையில்
எறும்பண்ட விடாமல்
என்னைக் காத்த ஏணியே!
கதைகள் ஆயிரம் சொல்லி
கதகதப்பளித்த கருணையே!
பசி பட்டினியறியாமல் பேணிக் காத்த பெட்டகமே!
நல்லறத்தையும் நற்பண்புகளையும்
நயத்துடன் நல்கிய நல்லுறவே!
தன்னுயிர் துச்சமென
என்னுயிர் உச்சமென
எண்ணும் ஏகாந்தமே!
நித்திரையிலும் உனது
நாடித்துடிப்பில் நீங்காமல்
நிலைப்பது நான்தான்!
ஊருணியாய் ஊற்றெடுக்கும்
உனது உன்னத அன்புக்கு
நிகரான கைம்மாறு
நிச்சயம் இல்லை!
இருந்தாலும் சொல்வேன்
ஆழ்மனதில் என்றும் 
ஆணிவேராய் நீ
அமர்ந்திருக்கிறாய்
அனுதினமும் என்னுடன்
அளவாடிக் களித்திருக்கிறாய்! 
அன்னையர் தின வாழ்த்துகள்!🤱🏻💐

Sunday, August 15, 2021

அலையும் கடலும்!

அலையும் கடலும்!

அலையில் அமைதி தேடினேன் 

கடலில் கரைந்து போனேன்

 சீறிப்பாயும் அலைகள்

 கடலின் கரையில் நுரைகள்

 அலைகளுக்கு இல்லை ஓய்வு

 கடலுக்கு இல்லை காய்வு

 அலையின் அசைவு அழகு 

கடலுக்கு உண்டோ தொலைவு

 கடலில் எழும்பும் அலையே 

கடலில் அடங்கும் அலையே 

கடலில் உறையும் அலையே 

கடலுக்கும் உனக்கும் கரையில் சங்கமம்.
- விஜி பாலாஜி

Sunday, June 7, 2020

எந்நாளும் நன்னாளே தான்!

அன்பும் அமைதியும் ஆரத் தழுவ, 
இன்பமும் ஈகையும் ஈரெட்டாய்ப் பெருக,
உண்மையும் ஊக்கமும் ஒன்றாய்ச் சேர,
எண்ணமும் ஏகாந்தமும் ஏற்றம் பெற,
ஐயமின்றி அமையுமே
ஒழுக்கமான ஓங்கிய வாழ்வு! 
ஔவையின் மொழிப்படி  
இஃதெல்லாம் ஒழுகப் பெற்றால்
எந்நாளும் நன்னாளே தான்!

சாதி, மதம் செத்தொழிந்து சமூகம் சிறப்பின்,
பசி, பட்டினி பறந்து பாருயர்ந்திடின்,
பஞ்சம், வறுமை வேரறுத்து பாரெழுமின்,
ஊழல், ஒழுக்கமின்மை ஒழித்து ஊரெழுமின்,
குற்றம் ,குழப்பம் குறைத்து கூடியிருப்பின்,
கற்றலும் கல்வியும் கனிந்திருப்பின்,
சுற்றமும், உற்றமும் சூழ்ந்திருப்பின்,
எந்நாளும் நன்னாளே தான்!

Sunday, May 10, 2020

அன்னையர் தினம்

அன்னையர் தினம்
அன்னையரின் 
அருமை பெருமைகளை
அசை போடும் தினம்!

அகத்தின் அவாக்களை
நகமெனக் கருதி
நறுக்கி வைத்து விட்டு
மகட்களின் தேவைகளை
முன்னிறுத்தும் முன்னோடி!
 
பெற்ற பிள்ளைகள்
பரணியில் புகழ் பெற
பற்றுடன் பாங்கைப்
புகட்டும் போராளி!

குழந்தைகளின் குறுநகையில்
குதூகலம் காணும்
குல விளக்கு!

தீய பழக்கம் தீண்டாமல்
தீ வேலியாய்த்  தடுத்து நிற்கும்
தீர்க்கதரிசி!

உயிர் போகும் தருணமும்
உள்ளத்தில் உறைந்து நிற்கும்
தாய்மையும் தவிக்குமே
நான் பெற்ற செல்வங்கள்
நல்ல படியாய் வாழ
நல்வழி கொடு இறைவா என்று
இறைவனிடம் இறைஞ்சியே
இறைவனடி சேரும்!

அன்னையர் அனைவருக்கும் 
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
- விஜி பாலாஜி

Sunday, March 22, 2020

கரோனாவின் தாக்கம்

covid -19
ஊரடங்கு உத்தரவு
நகரங்களில் கூட
நெடு நாளைக்குப் பிறகு
பறவைகளின்
கானக் குரல்கள்
காதில் ஒலிக்கின்றன!

பறவைகள்
குழப்பத்தில்
கூவிக் கொண்டுள்ளன!
கூட்டம் கூட்டமாய்
கும்மாளமிட்டு
கொண்டிருந்த மனிதர்கள்
எங்கே என?

மரத்தில் அமர்ந்து
மாசில்லாக் காற்றின்
மர்ம ரகசியத்தை அறிய
மன்றாடுகின்றன!

மனதளவில் குழப்பமோ!
கலிகாலத்தின்
கரோனா தாக்கம் 
மனிதர்களுக்கு மட்டுமா
அல்லது
மரங்களில் வாழும்
நமக்குமா என்று?!

Monday, January 21, 2019

இறை கண்டேன்

தாய்மையில் இறை கண்டேன்
தவழும் குழந்தையின்
மழலையில் இறை கண்டேன்
தானத்தில் இறை கண்டேன்
மான‌ம் காக்கும்
மறத்தில் இறை கண்டேன்
ஆழ்ந்த அமைதியில் இறை கண்டேன்
உதவும் உத்தமரின்
உள்ளன்பில் இறை கண்டேன்
நீதி நெறி தவறாத
நேர்மையில் இறை கண்டேன்
சூர்யோதய வண்ணத்தில்
சுகந்தமான காற்றில்
மெல்லிசையில்
மலரின் மணத்தில்
கடலின் ஓசையில்
நிலவின் ஒளியில்...
நீள்கிறது வரிசை!

பின் குறிப்பென்னவெனில்
இறை கண்டேன் என்பது
இறை கண்ட
இன்பம் கண்டேன்
என்பதாகும்.

Saturday, January 19, 2019

இசையும் இறையும்

இசையும் இறையும் ஒன்று!
உள்ளார்ந்து உணரும்போது
உருவாவது சொல்லில்
அடங்காத ஆர்ப்பரிக்கும்
அளவில்லா இன்பம்!

இறையை உணர
தவமும் தனிமையும் தேவை!
இசையை உணர
லயமும் லயிப்பும் தேவை!

இசையை இசைத்து
இறையை உணர்ந்தால்
இரட்டிப்பாகுமோ
இன்னும் இன்பம்!

Wednesday, July 25, 2018

தமிழ்

தமிழே
தணியாத தாகம்
உன் மீது எனக்கு
தித்திப்பாய் இருந்தாலும்
திகட்டவில்லை நீ எனக்கு!

தொன்மையான வரலாறோடு
தொன்று தொட்டு
திகழ்ந்து வரும் தமிழே!
தரணியாளும் தகுதியிருந்தும்
தகுதிக் குறைவுக்குள்ளானது ஏனோ?

தமிழ் பேசத் தயங்கும்
தமிழனே! உன்
தாய் மொழியாய்
தமிழ் மொழி கிடைத்ததுன்
தவப்பயன் என அறியாயோ?

மொழி,கலாச்சாரம்,பண்பாடு
மூன்றும் இணைந்தே வருவது.
மாற்றங்கள் வேண்டுமென்பதை
மறுப்பதற்கில்லை! ஆனால்
மடிந்தே போவதை
மனமேற்பதற்கில்லை!

வாருங்கள் அனைவரும்!
தாய் மொழி காப்போம்!
தமிழ் மொழி காப்போம்!
தமிழன் என்ற
தன்னடையாளம் காப்போம்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!

Thursday, November 9, 2017

வாழ்வின் நோக்கமென்ன...?

வாழ்வின் நோக்கமென்ன...?

அயராமல் உழைப்பதா?,
அழகைத் தேடுவதா?,
அறத்தைப்  பின்பற்றுவதா?,

ஆசை கொள்வதா?,
ஆசையைக் கொல்வதா?,
ஆளுமை கொள்வதா?,

ஈகை செய்வதா?,
ஈன்றவரைக் காப்பதா?,
ஈவிரக்கம் கொள்வதா?,

உடல் நலம் பேணுவதா?,
உண்டு களித்து உறங்குவதா?,
உலக நலத்திற்கு உழைப்பதா?,

ஊரார் போற்ற வாழ்வதா?,
ஊர் சுற்றிப் பார்ப்பதா ?,
ஊன் போற்றிக் காப்பதா ?,

வருமானத்தைத்  தேடுவதா?,
வயதைத் தொலைப்பதா?,
வளத்தைக் குவிப்பதா?,

சந்தோஷங் கொள்வதா?,
சங்கடந் தவிர்ப்பதா?,
சமாதானம் தேடுவதா?,

இன்னும் பல கேள்விகள்
எழுந்து கொண்டே உள்ளன..!
மண்ணில் படைக்கப் பட்ட
மனிதன் மீது
எண்ணிலடங்கா எதிர்பார்ப்புகள்!
எதை நோக்கிப்  பயணிக்கிறோம்
என்ற தெளிவில்லாமல்
எல்லாவற்றையும் எதிர்நோக்கி
அனுதினமும் பயணிக்கிறோம்..
பயணம் சிறக்க சக
பயணியின் வாழ்த்துக்கள்..!







Wednesday, June 28, 2017

நகரத்து சாலை

நகரத்து சாலை

எறும்புகளுக்கு இருக்கும்
இடைவெளிகூட
வண்டிகளுக்கு நடுவே இல்லை !

மயிரிழையில் உயிர் தப்பி
துயிலாமல் துரத்தோடும்
வகை வகையான வாகனங்கள்!

நடுச் சாலையில்
நிதானமாய் சாலையைக் கடப்பது
மனிதர்கள் மட்டுமல்ல
மாடுகளும் தான்!

வலம் வரும்
வாகனங்களின் வரிசை
வானத்தில் போட்டது ஓட்டை!

சுகாதாரத் சீர்கேடு
சுவாச மண்டலத்திற்கேது
சுத்தமான மூச்சு!

மனம் ஒப்பவில்லை எனினும்
மறுவழியில்லை...
மன வேதனையுடன் பயணிக்கின்றேன்
மகிழுந்தியில்...!

Thursday, June 12, 2014

ஒழிப்போம் குழந்தைத் தொழிலாளர்களை.....!!

 குழந்தை வயதில் 
 குடும்பத்தைக் காக்க
 கல்வியை இழக்கும்
 குழந்தையே.....!!!

 கருத்தாய் இருந்தும்
 கல்வி இல்லாததால் 
 இரக்கமில்லா இவ்வுலகில் 
 இழக்கப் போவது நீ
 ஏராளம்....!!!

குறுகுறுப்பாய்
ஓடியாடும் 
ஒப்பற்ற வயதில்
ஒருவனுக்கு அடிமையாய்
ஓயாமல் உழைக்கும்
உன்னைப் பார்த்தால்
உதிரம் கொதிக்குதடா....!!!

உனக்கு விடிவு வர
எத்தனை விதிகள் வந்தாலும்
எழ முடியாமல் 
எப்படியேனும் 
விழுகிறாயே 
வீசப் படும் சூழ்ச்சி
வலைக்குள்....!!!

குழந்தைத் தொழிலாளர் முறை 
ஒழிப்பு தினமான இன்று
ஒன்று கூடி 
உறுதி கொள்வோம்....
குரல் கொடுப்போம் என்றும்
குழந்தைத் தொழிலாளர்களை
கூண்டோடு ஒழிப்போமென.....!!! 

Thursday, September 12, 2013

சரியா..? தவறா...?


மழையே....
உன் இயல்புதான் என்ன...??

மிதமான மழையைத் தந்து 
மனதை மகிழ்விக்கிறாய்...
மெருகு கூட்டுகிறாய் பூமியை...

அவ்வப்போது 
அடைமழையைத் தந்து
அடை காக்கிறாய் மக்களை 
அண்டங் காக்கைகளாய் வீட்டுக்குள்....

வக்கிரமான மழையைத் தந்து 
வெள்ளத்தை உருவாக்கி
வேதனையையும் தருகிறாய்...

இயற்கையே இப்படியெனும் போது
இயற்கையிலிருந்து உருவான 
இந்த மனித இனம் 
இதற்கென்ன விதிவிலக்கா...??!!

இடத்திற்கு ஏற்ற 
இயல்பு சரியா..?? தவறா...??

  

Wednesday, August 7, 2013

புதிர்

உன்னையும் அறியாமல்
உனக்குள் உறைந்து நிற்கும் 
உற்சாக உணர்வு....

எதிலும் எப்போதும்
ஏங்கி நிற்கும்
எதிர்பார்ப்பு.....

கணநேரமும் கலையாமல்
கண்ணுக்குள் இருக்கும்
கருவறைப் பாசம்...

ஊர் விட்டு இருந்தாலும்
உள்ளம் தொடும்
உறவுப் பாலம்....

விளக்கங்கள் கொடுத்தாலும்
விளங்கிட முடியாத
வித்தை....

அனுபவித்தால்  மட்டுமே
அருந்த முடியும்
அமுதம்.....

புத்தகமாய் எழுதினாலும்
புரிந்திட முடியாத
புதிர்....

பருகியவர்களுக்கு
பதில் தெரியும்...
பருகாதவர்களுக்கு
பதில் இதோ.....

காதல்....!!!

Monday, September 24, 2012

ஊடகங்கள்


ஊடகங்கள் மீது 
எனக்கு ஊடல்...!!
உன் மீதிருந்த நம்பிக்கை 
உடைந்து போனது...!!
உன்னில் உலா வரும் 
செய்திகள் அனைத்தையும் 
உண்மையா என 
ஆராய வேண்டியுள்ளது ...!!

கணினி உலகில் 
கவனமாய் செய்தி கேட்க 
துளியும் நேரமின்றி 
திரிந்தோடும் போது....
செய்தியை செவி மடுத்து 
செம்மையானவையா என 
சேதியறிய ஊடகமே 
உலக மக்களுக்கு நேரமில்லை...!!

ஒவ்வொரு கட்சிக்கும் 
ஒவ்வொரு தொலைக்காட்சி...!!
இல்லை...இல்லை...
செய்திகள் சொல்லுவதற்கு என்றே 
சிறப்பாக ஒன்றுமுண்டு ...!!
ஒன்று பொருள் ஈட்ட ...
இன்னொன்று புகழ் ஈட்ட...!!

செய்திகள் தொலைக்காட்சியில்
சொல்லப்படுவது 
செய்திகளா? இல்லை பிரச்சாரமா? 
ஆண்டு முழுவதும் 
அழகான பிரச்சாரம் 
அரங்கேறிக் கொண்டிருக்கிறது...!!

எது சரி? எது தவறு?
என்று எப்படி 
எடுத்தறிவது
எளிளையான மக்கள்...???